2026-ஆம் ஆண்டுக்கான லெஜர் மகிழ்ச்சி குறியீட்டு ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, கனடாவின் ஒட்டுமொத்த மகிழ்ச்சி மதிப்பெண் 70.5-ஆக பதிவாகியுள்ளது. இது 2025-ஆம் ஆண்டின் 68.7 என்ற அளவை விட அதிகமாகும். கியூபெக் மாகாணம் 74.5 புள்ளிகளுடன் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக கனடாவின் மகிழ்ச்சியான மாகாணமாகத் தேர்வாகியுள்ளது.
பொருளாதார அழுத்தங்கள் மற்றும் வாழ்க்கைச் செலவு உயர்வு இருந்தபோதிலும், கனடா மக்களின் மகிழ்ச்சி அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வில் பங்கேற்ற 63,710 பேரில் பெரும்பாலானோர், குடும்பம், தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் உடல்நலம் ஆகியவையே தங்களின் மகிழ்ச்சிக்கு அடிப்படையான காரணங்கள் என்று தெரிவித்துள்ளனர். வேலை மற்றும் பயணங்களை விட இவை முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.
மாகாணங்களின் வரிசையில் நியூஃபவுண்ட்லாந்து மற்றும் லாப்ரடோர், நியூ பிரன்சுவிக் ஆகியவை முன்னணி இடங்களைப் பிடித்தன. நகரங்களைப் பொறுத்தவரை, 72.7 புள்ளிகளுடன் மாண்ட்ரியல் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஒன்டாரியோ மாகாணத்தில் பிராம்ப்டன் மற்றும் டொராண்டோ உள்ளிட்ட ஐந்து நகரங்கள் முதல் பத்து இடங்களுக்குள் வந்துள்ளன. பாதுகாப்பு, இயற்கை சூழல் மற்றும் அண்டை வீட்டாருடனான உறவுமுறை ஆகியவை மகிழ்ச்சியின் முக்கிய அங்கங்களாகக் இந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

