கனடாவின் ஒன்டாரியோ, பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் கியூபெக் ஆகிய மூன்று மாகாணங்களில் திங்கட்கிழமை இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் நார்த் வான்கூவர்-கேபிலானா, ஒன்டாரியோவின் பீச்சஸ்-ஈஸ்ட் யோர்க் மற்றும் கியூபெக்கின் சிகோடிமி-லே ஃபியார்ட் ஆகிய தொகுதிகளில் இந்தத் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.
லிபரல் கட்சிக்கு பாதுகாப்பான தொகுதிகளாகக் கருதப்படும் ஒன்டாரியோ மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா தொகுதிகளில் அமைச்சர்கள் பதவி விலகியதைத் தொடர்ந்து, அங்கு மீண்டும் லிபரல் கட்சியே வெற்றிபெறும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். நார்த் வான்கூவர்-கேபிலானா தொகுதியில் லிபரல் வேட்பாளர் பிரேடன் கெய்லி மற்றும் கன்சர்வேட்டிவ் வேட்பாளர் ஸ்டீபன் கர்ரன் உட்பட ஆறு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
கியூபெக் மாகாணத்தின் சிகோடிமி-லே ஃபியார்ட் தொகுதியில் கன்சர்வேட்டிவ் கட்சி கடும் சவால்களைச் சந்தித்து வருகிறது. ரிச்சர்ட் மார்டெல் மேலவைக்குத் தெரிவானதால் இத்தொகுதி வெற்றிடமானது. கோடைகால இறுதியில் நடைபெறும் இத்தேர்தல்களில் வாக்குப்பதிவு சதவீதம் குறைவாக இருக்கக்கூடும் என்பதால், முடிவுகள் எதிர்பாராத விதமாக அமையலாம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். தற்போது நாடாளுமன்றத்தில் லிபரல் கட்சி 171 இடங்களுடன் பெரும்பான்மையைத் தக்கவைத்துள்ளது.

