பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தேசிய ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் இந்தியா பங்கேற்கவுள்ளது.
செப்டம்பர் 28 முதல் 30 வரை நடைபெறும் இக்கூட்டத்தில் பாகிஸ்தானின் தலைமையில் நடத்தப்படவுள்ள நிகழ்வுகளுக்கான அட்டவணை அங்கீகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, இஸ்லாமாபாத்தில் நடைபெறும் நாடுகளின் தலைவர்கள் கவுன்சில் உச்சி மாநாட்டில் பங்கேற்கப் பிரதமர் நரேந்திர மோடிக்கு விரைவில் அழைப்பு விடுக்கப்படலாம்.
இரு நாடுகளுக்கும் இடையேயான உறைந்த உறவுகள் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு காரணமாக, பிரதமர் மோடி பாகிஸ்தான் செல்வது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக இஸ்லாமாபாத் உறுதியான மற்றும் மாற்ற முடியாத நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே அத்தகைய பயணம் குறித்து பரிசீலிக்கப்படும் என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கடந்த 2024 ஆம் ஆண்டு எஸ்சிஓ கூட்டத்தில் பங்கேற்க பாகிஸ்தான் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

