கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள சாட்ஸ்வொர்த் பகுதியில் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட அதிரடி வாகனச் சோதனையில், 5 இலட்சம் டொலர்களுக்கும் அதிகமான பெறுமதியுடைய பெருந்தொகை போதைப்பொருட்களும் நான்கு துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு புரூஸ் ஒன்டாரியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட சந்தேகநபர்கள் மற்றும் தெருவோர குற்றச்செயல்கள் தொடர்பான புலனாய்வு விசாரணைகளின் தொடர்ச்சியாகவே, நெடுஞ்சாலை 10 இல் இந்த வாகனத் தணிக்கை இலக்குவைத்து முன்னெடுக்கப்பட்டது. இச்சோதனையின் போது ஃபென்டானில் மற்றும் கொகேயின் என சந்தேகிக்கப்படும் பெருமளவிலான போதைப்பொருட்கள், பெருந்தொகை ரொக்கப் பணம் மற்றும் நான்கு துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் சந்தைப் பெறுமதி 5,00,000 டொலர்களுக்கும் அதிகம் எனவும், மீட்கப்பட்ட துப்பாக்கிகளின் பெறுமதி 25,000 டொலர்களுக்கும் அதிகம் எனவும் புலனாய்வு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து, டர்ஹாம் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர், கிறிஸ்டியன் ஐலண்ட் ஃபர்ஸ்ட் நேஷன் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபர் மற்றும் ஓவன் சவுண்ட் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபர் என மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது தடைசெய்யப்பட்ட துப்பாக்கிகளை உடமையில் வைத்திருந்தமை, தயாரிப்பு எண்கள் அழிக்கப்பட்ட ஆயுதங்களை வைத்திருந்தமை, 5,000 டொலர்களுக்கும் அதிகமான குற்றச் சொத்துக்களை வைத்திருந்தமை மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

