கனடா முழுவதும் விற்பனை செய்யப்பட்ட பல்வேறு வகையான பாலாடைக்கட்டிகளை (Cheese) உடனடியாக திரும்பப் பெறுவதாக கனடா உணவு ஆய்வு முகமை அறிவித்துள்ளது. ‘புரோமேஜரி லான்செஸ்டர்’ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட பொருட்களில் ‘லிஸ்டீரியா மோனோசைட்டோஜீன்ஸ்’ என்ற பாக்டீரியா நச்சு கலந்திருக்கலாம் என்ற அச்சத்தின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரும்பப் பெறுதல் முதல் நிலை அபாயமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது, இந்த உணவை உட்கொள்வது தீவிர உடல்நலக் கேடுகளையோ அல்லது மரணத்தையோ கூட விளைவிக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த தயாரிப்புகளை உட்கொண்டதால் எந்தவித நோய்த்தொற்றும் பதிவாகவில்லை என்றாலும், உணவு கெட்டுப்போன தோற்றத்தையோ வாசனையையோ வெளிப்படுத்தாவிட்டாலும் நச்சுத்தன்மையுடன் இருக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. வாந்தி, குமட்டல், தொடர் காய்ச்சல், தசை வலி, கடுமையான தலைவலி மற்றும் கழுத்து விறைப்பு ஆகியவை இந்நோயின் அறிகுறிகளாகும்.
குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள் இதனால் அதிக ஆபத்தை எதிர்நோக்குகின்றனர். பார்ம் பாய், லான்செஸ்டர் மற்றும் லைப் ஸ்மார்ட் ஆகிய மூன்று வணிகப் பெயர்களின் கீழ் விற்பனை செய்யப்பட்ட பன்னிரண்டு வகையான பாலாடைக்கட்டிகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்கள் குளிர்சாதனப் பெட்டிகளை உடனடியாகப் பரிசோதித்து, பாதிக்கப்பட்ட தயாரிப்புகளைப் பயன்படுத்தாமல் அப்புறப்படுத்துமாறு அல்லது வாங்கிய விற்பனையகங்களில் திருப்பி ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பான மேலதிக ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

