கொச்சி சி.எம்.ஆர்.எல் தாதுமணல் நிறுவனத்திடமிருந்து முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணாவின் எக்ஸாலாஜிக் நிறுவனம் மூலம் ரூ.3.28 கோடி லஞ்சம் பெற்றதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் கேரள லஞ்ச ஒழிப்புத் துறை பினராயி விஜயன், மகள் வீணா மற்றும் மருமகன் முகமது ரியாஸ் ஆகியோர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
எஃப்.ஐ.ஆர்-க்கு எதிரான மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, அக்டோபர் 23 அன்று விசாரணைக்கு ஆஜராக பினராயி விஜயனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. கைது நடவடிக்கையை தவிர்க்க அவர் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
இதனிடையே, மத்திய அரசு அமலாக்கத்துறையை அரசியல் பழிவாங்கும் ஆயுதமாக பயன்படுத்துவதாக சி.பி.எம் மூத்த தலைவர் ஆனாவூர் நாகப்பன் குற்றம் சாட்டியுள்ளார். சி.எம்.ஆர்.எல் நிறுவனம் வழங்கிய ரூ.182 கோடியில், வீணாவின் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ரூ.2.71 கோடி வங்கி வழியே பெறப்பட்டு வரிகளும் செலுத்தப்பட்டுள்ளன.
ஆனால், எவ்வித ஆவணமுமின்றி ரொக்கமாக பணம் பெற்ற காங்கிரஸ் மற்றும் லீக் தலைவர்கள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். சி.பி.எம்-ன் புகழை கெடுக்கவே பா.ஜ.க முயற்சிப்பதாகவும், இதனை சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்வோம் என்றும் அவர் தெரிவித்தார்.

