ஐபிஎல் 2026 தொடரில் நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸை 103 ரன்கள் வித்தியாசத்தில் துவம்சம் செய்து புதிய சரித்திரம் படைத்துள்ளது. மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், சென்னை அணியின் அதிரடி ஆட்டம் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
முதலில் பேட்டிங் செய்த சென்னை அணிக்கு, சஞ்சு சாம்சன் வானவேடிக்கை காட்டினார். பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக பறக்கவிட்ட அவர், இந்த சீசனின் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்து 101 ரன்கள் குவித்தார். இதனால் சிஎஸ்கே 20 ஓவர்கள் முடிவில் 207 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது.
கடினமான இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி, சென்னையின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. குறிப்பாக அகீல் ஹொசைனின் சுழலில் சிக்கி 4 விக்கெட்டுகளை பறிகொடுத்த மும்பை, 104 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸை 100 ரன்களுக்கும் அதிகமான வித்தியாசத்தில் வீழ்த்திய முதல் அணி என்ற மெகா சாதனையை சிஎஸ்கே நிகழ்த்தியுள்ளது.
2015-ல் பஞ்சாப் அணிக்கு எதிராகப் பெற்ற 97 ரன்கள் வித்தியாசத்திலான வெற்றியே சென்னையின் மிகப்பெரிய வெற்றியாக இருந்தது. தற்போது 103 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தனது சொந்த சாதனையை சென்னை முறியடித்துள்ளது.
இதற்கு முன் 2013-ல் ராஜஸ்தான் அணி மும்பையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. அதை 13 ஆண்டுகளுக்குப் பிறகு சிஎஸ்கே மாற்றியமைத்துள்ளது.

