கனடாவின் கொஸ்ட்கோ விற்பனை நிலையங்களில் விநியோகிக்கப்பட்ட குறிப்பிட்ட வகை ஷாம்பு மற்றும் கண்டிஷனர்களில் கிருமித் தொற்று அபாயம் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஒன்ராறியோ மற்றும் கியூபெக் மாகாணங்களில் மே 10 முதல் 12 வரை விற்பனை செய்யப்பட்ட ‘ரென்பியூர் டீ ட்ரீ அண்ட் ரோஸ்மேரி ஸ்கால்ப் ரீபாலன்சிங்’ தயாரிப்புகளிலேயே இந்த நுண்ணுயிர் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கொஸ்ட்கோ நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, இந்தத் தயாரிப்புகளில் நுண்ணுயிரிகளின் அளவு அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக நுகர்வோருக்குத் தோல் எரிச்சல் மற்றும் ஒவ்வாமை போன்ற உபாதைகள் ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுவரை எவருக்கும் தீவிர உடல்நலப் பாதிப்புகள் ஏற்படவில்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தத் தயாரிப்புகளைத் திரும்பப் பெறுவதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட தயாரிப்புகளை வாங்கிய வாடிக்கையாளர்கள் அவற்றை உடனடியாகப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், இந்தத் தயாரிப்புகளைக் கனடாவில் உள்ள எந்தவொரு கொஸ்ட்கோ கிளைகளிலும் ஒப்படைத்து, அதற்கான முழுமையான பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். பொதுச் சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் நலன் கருதி இந்த அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

