சமூக வலைதளங்களில் உணவு விமர்சனம் செய்யும் யூடியூபர்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை புதிய அதிரடி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இனிமேல் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் முறையான உரிமம் பெற்றுள்ள உணவகங்களில் மட்டுமே யூடியூபர்கள் உணவு விமர்சனங்களை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உணவு விமர்சனம் செய்யும் நபர்கள், உணவகங்களின் வெளிப்புற அழகையும், உணவின் தோற்றத்தையும் மட்டும் பார்த்துவிட்டு வீடியோக்களை எடுக்கக் கூடாது என உணவு பாதுகாப்புத் துறை கறாராகத் தெரிவித்துள்ளது.
மாறாக, அந்த உணவகங்களில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் குடிநீர் தரமானதாக இருக்கிறதா மற்றும் சமையலறை உள்ளிட்ட பகுதிகள் முறையான சுகாதாரப் பராமரிப்புடன் இருக்கிறதா என்பதைத் தீர ஆய்வு செய்த பிறகே தங்களது விமர்சனப் பதிவுகளை வெளியிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
பொதுமக்களின் ஆரோக்கியத்தை நல்வழியில் பாதுகாக்கவும், தரமற்ற உணவகங்கள் விளம்பரங்கள் மூலம் பிரபலமாவதைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறும் உணவகங்கள் மற்றும் தவறான தகவல்களைப் பரப்பும் யூடியூபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் பாயும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

