தமிழக அரசியல் களத்தில் பரபரப்பான புதிய திருப்பமாக, அதிமுக எம்.எல்.ஏ. எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, பதவியை ராஜினாமா செய்யும் 6-ஆவது அதிமுக எம்.எல்.ஏ. இவர் ஆவார். இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் கடுமையாக விமர்சித்து ட்வீட் செய்துள்ளார்.
தனது பதிவில், “மற்றொரு நாள். மற்றுமொரு ராஜினாமா. இந்த Sofa Model ஆட்சி அமைந்த பிறகு, அ.தி.மு.க.வின் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 6-ஆவது எம்.எல்.ஏ.வாக இன்று பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல் எந்த அளவுக்கு extreme ஆகியுள்ளது என்பதையே இது காட்டுகிறது. ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த கட்சிகளின் மீது நம்பிக்கையின்றி, நிறுத்தாமல் MLA-க்கள் purchase-ஐ தொடருவது, மக்களுக்கு இழைக்கின்ற மாபெரும் துரோகம்” என்று உதயநிதி சாடியுள்ளார்.
மேலும், “தொட மாட்டேன் – தொட்டா விட மாட்டேன் என்று script-படி பொங்கிய முதலமைச்சர், அடுத்த scene-ல், சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியவரை தன் கட்சியில் சேர்க்க முயல்வது ஏன்? #SofaModel அரசின் இந்த Washing Machine அரசியலை தமிழ்நாடு பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது. திணிக்கப்படும் இடைத்தேர்தல்கள் மூலம் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” என்றும் அவர் பதிவிட்டுள்ளார். இச்சம்பவம் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

