நடிகர் விஜய் தவெகவை துவங்கிய போது விஜய்க்கு கிடைத்த வரவேற்பை பார்த்து 2026 சட்டமன்ற தேர்தலுக்கு அந்த கட்சியுடன் கூட்டணி வைக்க ராகுல் காந்தி விரும்பினார். விஜயும் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க ஆர்வமாக இருந்தார். ஆனால் சோனியா காந்தி மற்றும் மல்லிகார்ஜுனா கார்கே ஆகியோர் திமுகவுடன் பயணிப்பதே நல்லது என சொன்னதால் திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியானது.
இதையடுத்து தவெக தனித்து போட்டியிட்டது. திமுக 74 தொகுதிகளிலும், தவெக 108 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. ‘வட போச்சே’ என்கிற மனநிலையில் காங்கிரஸ் இருந்த போதுதான் தவெக ஆட்சியமைக்க மேலும் 10 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்பட, திமுக கூட்டணியிலிருந்து விலகி தவெகவுடன் சேர்ந்தது காங்கிரஸ். இதற்காக 2 அமைச்சர் பதவிகளையும் காங்கிரஸ் வாங்கிக் கொண்டது.
இனிவரும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களிலும் காங்கிரஸ் – தவெக கூட்டணி தொடரும் என தெரிகிறது. அதேநேரம் காலியாக இருக்கும் 7 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றுவிட்டால் அக்கட்சி எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 114ஆக உயர்ந்து பெரும்பான்மைக்கு இன்னும் 4 எம்.எல்.ஏக்கள் மட்டுமே தேவை என்கிற நிலை உருவாகும். பாஜக அழுத்தம் கொடுத்து காங்கிரசை வெளியேற்றும் சூழல் ஏற்பட்டால் பாமகவின் ஆதரவை தவெக நாடும். அதன்மூலம் தவெக ஆட்சியை தக்க வைக்க முடியும்..
தவெக தனது ஆதரவை சார்ந்திருக்க வேண்டும் என்பதற்காகத்தான் பாமக உள்ளே வருவதை காங்கிரஸ் எதிர்ப்பதாக சொல்லப்படுகிறது. இது அன்புமணி ராமதாஸுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால்தான் மேகதாது போன்ற தேசிய விவகாரங்களில் ராகுல் காந்தியையும், தமிழக பிரச்சினைகளில் தவெக அரசையும் அன்புமணி தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார் என அரசியல் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

