குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோக பொருட்களை ஊக்குவிக்கும் வகையில் இன்ஸ்டாகிராமில் வெளியாகும் விளம்பரங்களை உடனடியாக அகற்றுமாறு மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு அதிரடியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இன்ஸ்டாகிராமில் வெளியாகும் சில விளம்பரங்கள் சட்டவிரோதமான உள்ளடக்கங்களை கொண்டிருப்பதாகவும், தடை செய்யப்பட்ட டெலிகிராம் சேனல்களை பரிந்துரைப்பதாகவும் புகார்கள் எழுந்ததை தொடர்ந்து மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்த கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விளக்கத்தை சமர்ப்பிக்குமாறு மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு 7 நாட்கள் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதும், அவர்களுக்கு எதிரான இணைய குற்றங்களை தடுப்பதும் தங்களின் முக்கிய நோக்கம் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் தளங்களில் இதுபோன்ற சட்டவிரோத செயல்கள் அனுமதிக்கப்பட கூடாது என்பதில் மத்திய அரசு மிக உறுதியாக உள்ளது.
மத்திய அரசின் இந்த அதிரடி நோட்டீஸை தொடர்ந்து, மெட்டா நிறுவனம் தங்களின் இன்ஸ்டாகிராம் தளத்தில் உள்ள அத்தகைய விளம்பரங்கள் மீது என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது மற்றும் அரசுக்கு என்ன விளக்கம் அளிக்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

