கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள அபோட்ஸ்போர்டு சர்வதேச விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாதுகாப்பு மீறல் சம்பவம் ஒன்று சனிக்கிழமை மாலை நிகழ்ந்துள்ளது. 53 வயதுடைய நபர் ஒருவர், தனது சொகுசு வாகனத்தை அதிவேகமாக ஓட்டி வந்து, விமான நிலையத்தின் பாதுகாப்பு வேலிகளைத் தகர்த்துக் கொண்டு ஓடுபாதைக்குள் புகுந்துள்ளார். சனிக்கிழமை மாலை சுமார் 4:30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தால் விமானப் போக்குவரத்து செயல்பாடுகள் சிறிது நேரம் பாதிக்கப்பட்டன.
வாகனம் ஓடுபாதைக்குள் நுழைந்தவுடன், விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் உடனடியாகச் செயல்பட்டு தரையிறங்கவிருந்த பிற விமானங்களை மாற்றுப் பாதையில் திருப்பிவிட்டது. காவல்துறையினர் சம்பவ இடத்திலேயே வாகனத்தைச் செலுத்திய நபரைக் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் அவர் மது அல்லது போதைப் பொருள் உட்கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றாலும், பாதுகாப்பு வேலியைத் தகர்த்து ஓடுபாதைக்குள் நுழைந்ததற்கான நோக்கம் குறித்துப் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

