பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் ஸ்மார்ட்போன் பயன்பாடு அவர்களின் எதிர்காலத்தை சீரழிப்பதாக மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி கவலை தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, மாணவர்களுக்கு கைப்பேசி வாங்குவதற்காக வழங்கப்பட்டு வந்த நிதியுதவியை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக கல்வி சார்ந்த ‘டேப்லெட்’ வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஹவுராவில் நடைபெற்ற ‘சாரதி’ மிதிவண்டி விநியோகத் திட்டத் தொடக்க விழாவில் பேசிய முதல்வர், பள்ளிகளில் மாணவர்கள் மொபைல் போன் பயன்படுத்துவதை தாம் கடுமையாக எதிர்ப்பதாகக் கூறினார். இது இளைய தலைமுறைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்துவதாகவும் அவர் எச்சரித்தார்.
முந்தைய அரசு 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மொபைல் போன் வாங்க ரூ.10,000 வழங்கி வந்த நிலையில், தேவைப்பட்டால் கூடுதல் நிதி ஒதுக்கி மாணவர்களின் படிப்புக்கு மட்டுமே பயன்படும் கல்வி சார்ந்த டேப்லெட்களை வழங்க கல்வித்துறை அமைச்சரிடம் கேட்டுக் கொண்டுள்ளதாகக் கூறினார்.
மாணவர்கள் இரவு நேரத்தில் விழித்திருந்து மொபைல் போன் பயன்படுத்துவது அவர்களின் கவனத்தை சிதைப்பதாகக் குறிப்பிட்ட அவர், இத்தகைய சீர்திருத்தங்களைக் கொண்டு வராவிட்டால் சரியான எதிர்கால தலைமுறையை உருவாக்க முடியாது என்றும் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

