மத்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, டெல்லியில் “இந்தியா” கூட்டணி தலைவர்கள் நடத்திய பிரம்மாண்ட பேரணி மற்றும் போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணியாக செல்ல முயன்றபோது, காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் உள்ளிட்டோர் ஆகாஷவாணி பவன் மற்றும் நிதி ஆயோக் அருகே சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது, ராகுல் காந்தி தடுப்பு காவலில் வைக்கப்பட்டார். மேலும், ஆகாஷவாணி பவன் வளாகத்திற்குள் நுழைந்த இளைஞர் காங்கிரஸ் மற்றும் NSUI தொண்டர்களை காவல்துறையினர் கைது செய்தனர். “வாக்கு திருடனே பதவியை விட்டு விலகு” என்ற கோஷங்கள் பேரணியில் எதிரொலித்தன.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் “வாக்கு திருட்டிற்கு” வழிவகுப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக சாடினார். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் ஜனநாயகத்திற்கு எதிரானவை என கூறி எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பியுள்ளன. இதனிடையே, “இந்தியா” கூட்டணியின் இந்த நடவடிக்கை ராகுல் காந்தியை மீண்டும் அரசியலில் நிலைநிறுத்துவதற்கான முயற்சி என பாஜக விமர்சித்துள்ளது.

