இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை (SIR) மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் ராஜினாமாவை வலியுறுத்தி, காங்கிரஸ் உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் டெல்லியில் பிரம்மாண்ட போராட்டத்தை மேற்கொண்டனர்.
ஜந்தர் மந்தர் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற எதிர்க்கட்சி எம்பிக்களை டெல்லி காவல்துறை தடுத்து நிறுத்தியது. அப்போது, சாங்கிரி-லா ஹோட்டல் அருகே மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வதேரா மற்றும் பெண் எம்பிக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். கையெழுத்திடப்பட்ட அரசியலமைப்பு சட்டப் புத்தகத்தை கையில் ஏந்தியபடி பிரியங்கா காந்தி சாலையில் அமர்ந்து தனது எதிர்ப்பை பதிவை செய்தார்.
காவல்துறையினர் அவர்களை பலவந்தமாக அப்புறப்படுத்தி பேருந்தில் ஏற்றி கைது செய்தனர். காவல்துறையினர் தங்களை மோசமாக நடத்தியதாகவும், தள்ளிவிட்டதாகவும் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டினார். தலைவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் டயர்களைக் காங்கிரஸ் தொண்டர்கள் சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இப்போராட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரெக் ஓ பிரையன், ஆர்ஜேடி எம்பி மனோஜ் குமார் ஜா உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் பாதுகாக்கத் தொடர்ந்து போராட்டங்கள் தொடரும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

