ஜெர்மனியில் கட்டாய ராணுவ பயிற்சி எதிர்ப்பு, உயர்ந்து வரும் வாழ்க்கை செலவினங்கள் மற்றும் கல்வி நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ‘ஜென் ஜி’ தலைமுறையை சேர்ந்த இளைஞர்கள் நடத்திய போராட்டம் பெரும் வன்முறையாக மாறியுள்ளது.
‘Gen Z regelt’ என்ற அமைப்பின் சார்பில் பெர்லின், ஃபிராங்க்ஃபர்ட், முனிச் உள்ளிட்ட 34 நகரங்களில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஃபிராங்க்ஃபர்ட் நகரில் நடந்த போராட்டத்தின் போது முகமூடி அணிந்த போராட்டக்காரர்கள் கடைகளின் கண்ணாடிகளை உடைத்து சூறையாடினர்.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மீது எரிபொருள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஹாம்பர்க் நகரில் தடுப்புகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. அமைதியான முறையில் தொடங்கப்பட்ட இந்த போராட்டங்களில் தீவிரவாத குழுக்கள் ஊடுருவி வன்முறையை தூண்டுவதாக உள்நாட்டு பாதுகாப்பு துறை எச்சரித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் இளைஞர்களின் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வரும் சூழலில், பிரான்ஸ் மற்றும் செர்பியாவை தொடர்ந்து தற்போது ஜெர்மனியிலும் இந்த இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

