உலகப்புகழ் பெற்ற கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, ஆனந்த் அம்பானி குஜராத்தின் ஜாம்நகரில் உருவாக்கியுள்ள ‘வந்தாரா’ வனவிலங்கு மறுவாழ்வு மையத்திற்கு சிறப்பு வருகை தந்தார். இந்திய பாரம்பரிய கலாச்சாரமும் நவீன அறிவியல் தொழில்நுட்பமும் இணைந்து விலங்குகளை பாதுகாக்கும் விதத்தை கண்டு அவர் வியப்படைந்தார்.
மெஸ்ஸியுடன் அவரது சக வீரர்களான லூயிஸ் சுவாரஸ் மற்றும் ரோட்ரிகோ டி பால் ஆகியோரும் வந்திருந்தனர். வந்தாராவின் வழக்கப்படி, சனாதன தர்ம முறைப்படி மகா ஆரத்தி மற்றும் பல்வேறு பூஜைகளில் கலந்துகொண்டு மெஸ்ஸி வழிபட்டார். பின்னர், அங்கிருந்த சிங்கம், புலி மற்றும் யானைகள் பராமரிப்பு மையங்களை பார்வையிட்டார்.
இந்த வருகையின் நெகிழ்ச்சியான தருணமாக, ஆனந்த்-ராதிகா தம்பதியினர் ஒரு சிங்கக்குட்டிக்கு மெஸ்ஸியின் நினைவாக ‘லியோனல்’ எனப் பெயரிட்டனர். மேலும், ‘மணிக்லால்’ என்ற யானை குட்டியுடன் மெஸ்ஸி கால்பந்து விளையாடியது அங்கிருந்தவர்களை வெகுவாக கவர்ந்தது.

