காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், பிரியங்கா காந்தியின் பிரதமர் பதவி குறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
ராகுல் காந்தியை இந்தியாவின் பிரதமராக அமர வைப்பதே பிரியங்கா காந்தியின் ஒரே லட்சியம் என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் காங்கிரஸ் எம்.பி இம்ரான் மசூத் மற்றும் ராபர்ட் வத்ரா ஆகியோர் பிரியங்கா காந்தி பிரதமராக வேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்தனர்.
இதனை பயன்படுத்திக் கொண்ட பாஜக, ராகுல் காந்தியின் தலைமை மீது அக்கட்சியினருக்கே நம்பிக்கை இல்லை என்று விமர்சித்தது. இதற்கு பதிலளித்த சிவக்குமார், ராகுல் காந்தியே தங்களின் மிகச்சிறந்த தலைவர் என்றும், அவரை முன்னிறுத்தியே பிரியங்கா காந்தி பணியாற்றி வருவதாகவும் கூறினார்.
மேலும், கர்நாடக உள்கட்சி பதவி மாற்றங்கள் குறித்து பேசிய அவர், மேலிடத்தின் முடிவுகளுக்குத் தான் எப்போதும் கட்டுப்படுவதாக தெரிவித்தார். பிரியங்காவை விட ராகுலையே தாங்கள் பிரதமராக பார்க்க விரும்புவதாகத் தெரிவித்த சிவக்குமாரின் இந்த பேச்சு, காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் தலைமை குறித்த விவாதங்களுக்கு பதிலடியாக அமைந்துள்ளது.

