சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படம் வரும் ஜனவரி 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இப்படத்தை பார்த்த தணிக்கைக் குழு படத்தில் இடம்பெற்றுள்ள பல முக்கியமான காட்சிகள் மற்றும் வசனங்களுக்கு தடை விதித்து, அதிகப்படியான ‘கட்களை’ பரிந்துரைத்துள்ளது. குறிப்பாக, இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடர்பான வரலாற்று சம்பவங்கள் மற்றும் அரசியல் வசனங்களுக்கு தணிக்கை குழு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
படத்தின் மையக்கருவே இந்தி எதிர்ப்பு போராட்டத்தை சுற்றி அமைந்துள்ள நிலையில், அந்த காட்சிகளை நீக்கினால் படத்தின் ஓட்டம் பாதிக்கப்படும் என படக்குழு கருதுகிறது. இதனால், தணிக்கைக் குழுவின் முடிவை எதிர்த்து, படக்குழுவினர் தற்போது ‘ரிவைஸிங் கமிட்டிக்கு’ படத்தை அனுப்பியுள்ளனர். இதனால் திட்டமிட்டபடி ஜனவரி 10-ஆம் தேதி படம் வெளியாகுமா அல்லது தள்ளிப்போகுமா என்ற கவலை சிவகார்த்திகேயன் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.
கலை உணர்வோடு எடுக்கப்பட்ட வரலாற்றுப் பதிவுகளைத் தணிக்கைக் குழு முடக்கக்கூடாது எனச் சமூக வலைதளங்களில் ஆதரவுக் குரல்கள் பெருகி வருகின்றன.

