மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் நிலைகொண்டுள்ள ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத குழுவின் இலக்குகளை குறிவைத்து அமெரிக்க ராணுவம் அதிரடி தாக்குதலை நடத்தியுள்ளது. நைஜீரியாவின் வடகிழக்கு பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ‘இஸ்லாமிய அரசு – மேற்கு ஆப்பிரிக்க மாகாணம்’ மற்றும் அதனுடன் தொடர்புடைய பயங்கரவாத குழுக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அமெரிக்காவின் ஆப்பிரிக்கா கட்டளை அமைப்பு நைஜீரிய ராணுவத்துடன் இணைந்து இந்த வான்வழி தாக்குதல்களை முன்னெடுத்தது. பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்கள் மற்றும் வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இடங்கள் சிதைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபகாலமாக நைஜீரியாவில் பொதுமக்களுக்கு எதிராகவும், அரசு படைகளுக்கு எதிராகவும் அதிகரித்து வரும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல் அமைந்துள்ளது.
இந்த ராணுவ நடவடிக்கையில் பல ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், முக்கிய தளவாடங்கள் அழிக்கப்பட்டதாகவும் பென்டகன் தரப்பு தெரிவித்துள்ளது.. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் ஆப்பிரிக்க விரிவாக்கத்தை தடுப்பதில் இத்தகைய நடவடிக்கைகள் ஒரு முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகின்றன.

