மத்திய அரசு நிறைவேற்றியுள்ள ‘மத்திய கலால் திருத்த மசோதா – 2025’ புகையிலை உபயோகிப்பாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புகையிலை பழக்கத்தை குறைக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த சட்டத்தின் மூலம் சிகரெட், ஹூக்கா மற்றும் சுருட்டு மீதான வரி பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் இந்த மசோதா அமலுக்கு வந்தால், ரூ.18-க்கு விற்கப்படும் ஒரு சிகரெட்டின் விலை ரூ.72 வரை உயரக்கூடும்.
புதிய சட்டப்படி, 1,000 சிகரெட்டுகளுக்கு விதிக்கப்படும் வரி ரூ.735-லிருந்து அதிகபட்சமாக ரூ.11,000 வரை அதிகரிக்க உள்ளது. இது தவிர, மெல்லும் புகையிலை மீதான வரி 100 சதவீதமாகவும், புகை கலவைகள் மீதான வரி 325 சதவீதமாகவும் உயர்த்தப்படவுள்ளது.
இந்த அதிரடி விலை உயர்வு குறித்து இணையதளங்களில் விவாதங்கள் அனல் பறக்கின்றன. ஒரு தரப்பினர் இது உடல்நலத்தை பாதுகாக்கவும், இளைஞர்கள் இப்பழக்கத்திற்கு அடிமையாவதை தடுக்கவும் உதவும் என்று வரவேற்கின்றனர். அதே சமயம், விலையுயர்ந்த பிராண்டுகளுக்கு பதிலாக தரமற்ற புகையிலை மற்றும் சட்டவிரோத கள்ளச்சந்தை விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மற்றொரு தரப்பினர் கவலை தெரிவிக்கின்றனர்.

