இந்திய டெஸ்ட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து கௌதம் கம்பீர் நீக்கப்பட உள்ளதாக வெளியான செய்திகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. கம்பீருக்குப் பதிலாக வி.வி.எஸ். லக்ஷ்மண் நியமிக்கப்படவுள்ளதாகப் பரவிய செய்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்று பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா விளக்கம் அளித்துள்ளார்.
சமீபத்தில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி சொந்த மண்ணில் படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்விகளால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பு பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளதால், பயிற்சியாளர் மாற்றம் குறித்து வதந்திகள் பரவின. ஆனால், தலைமை பயிற்சியாளரை மாற்றும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்று பிசிசிஐ செயலாளர் தேவஜித் சய்கியா தெரிவித்துள்ளார்.
தற்போது இந்திய அணியின் கவனம் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து மாறி, பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கவுள்ள டி20 உலகக்கோப்பையை நோக்கித் திரும்பியுள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி, ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் இல்லாத நிலையில், சொந்த மண்ணில் உலகக் கோப்பையைத் தக்கவைக்கும் சவாலை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது.

