திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும், அதன் பிற தோழமை கட்சிகளுக்கும் இடையே தற்போது மோதல் போக்கு உருவாகியுள்ளது.
காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி, தமிழகத்தின் கடன் சுமை குறித்து விமர்சித்ததை தொடர்ந்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விசிக, மதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தின. இதற்கு காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“காங்கிரஸ் தனது உள்கட்சி விவகாரங்களை எப்படி கையாள வேண்டும் என்று கூட்டணி கட்சிகள் உத்தரவிட முடியாது” என்று கூறிய மாணிக்கம் தாகூர், இது போன்ற பொதுவெளியிலான விமர்சனங்கள் கூட்டணி தர்மத்திற்கு எதிரானது என்று சாடியுள்ளார்.
மேலும், கூட்டணி கட்சிகள் தங்களது “லக்ஷ்மண் ரேகை”யை மதிக்க வேண்டும் என்றும், இத்தகைய செயல்கள் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கே சாதகமாக அமையும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

