புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சாலை விபத்துகளை தவிர்க்கவும் கர்நாடக அரசு ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதிக போதையில் சுயநினைவின்றி இருப்பவர்களை பாதுகாப்பாக அவர்கள் வீடுகளில் கொண்டு போய் சேர்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு, மைசூரு போன்ற பெரிய நகரங்களில் புத்தாண்டு இரவில் அதிக அளவில் மக்கள் கூடுவார்கள் என்பதால், போதை அதிகமாகி நடக்க கூட முடியாத நிலையில் இருப்பவர்களை மீட்க இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக 15 இடங்களில் தற்காலிக ஓய்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அங்கு போதை தெளிந்தவுடன் அவர்கள் பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். குறிப்பாக பெண்களின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும், இக்கட்டான சூழலில் இருப்பவர்களை யாரும் தவறாக பயன்படுத்தாத வண்ணம் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட்டங்கள் பாதுகாப்பாக அமைவதை உறுதி செய்ய அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.

