ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டி இந்திய ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான பை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அந்த பையை சோதித்ததில், அதனுள் ஏராளமான துப்பாக்கி குண்டுகள் மற்றும் வெடிபொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் மூலம் கொண்டு வரப்பட்ட இந்த ஆயுதங்கள், இலக்கை அடையாமல் தவறி கீழே விழுந்திருக்கலாம் என்று ராணுவ தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக 35 வயதான இஷாத் என்பவர் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து பாகிஸ்தான் கரன்சி நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பிடிபட்ட நபர் பாகிஸ்தான் உளவாளியாக செயல்பட்டாரா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அதே வேளையில், முதற்கட்ட விசாரணையில் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் ஒரு தரப்பினர் கூறுவதால், இது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

