2026ஆம் ஆண்டில் கனடா தனது குடியேற்ற விதிகளை இறுக்கமாக்கி, புதிய நிரந்தரக் குடியிருப்பாளர்கள், மாணவர்கள் மற்றும் தற்காலிகப் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவுள்ளது.
வேலையின்மை விகிதத்தைக் குறைத்தல், வீட்டுக் கட்டுப்படியாகும் தன்மையை நிவர்த்தி செய்தல் மற்றும் சுகாதாரம் போன்ற பொதுச் சேவைகளின் மீதான அழுத்தங்களைக் குறைப்பதே இந்த மாற்றங்களின் நோக்கமாகும்.
நிரந்தரக் குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை 2026இல் 380,000 ஆகக் குறைக்கப்படும். இது 2024இல் 483,000 ஆக இருந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியாகும். இந்த புதிய முறைமையானது, திறமையான தொழிலாளர்கள், பிரெஞ்சு மொழி பேசுபவர்கள் மற்றும் கனேடிய அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும்.
தற்காலிகப் பணியாளர்களின் எண்ணிக்கை 2026இல் 230,000 ஆகக் கட்டுப்படுத்தப்படும். சர்வதேச மாணவர்களுக்கான நுழைவிசைகளின் எண்ணிக்கையும் பாதியாகக் குறைக்கப்பட்டு, 2026இல் 155,000 விசாக்கள் மட்டுமே வழங்கப்படும். அத்துடன், மாணவர்கள் கனடாவில் வாழ்வதற்குப் போதுமான நிதி ஆதாரங்களைக் கொண்டிருப்பதை நிரூபிக்க வேண்டும்.
ஏற்கனவே கனடாவில் பணிபுரியும் தற்காலிகப் பணியாளர்களை நிரந்தரக் குடியிருப்பாளர்களாக மாற்றுவதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்கும். குடும்ப ஒன்றிணைப்புப் பிரிவின் கீழ் ஏற்றுக்கொள்ளப்படும் குடியேறிகளின் எண்ணிக்கையும் குறைக்கப்படும்.
சர்வதேச மாணவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தற்காலிகப் பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் வேலை அனுமதிப்பத்திரங்களைப் பெறுவதற்கான விதிகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. அகதிகள் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் அனுமதிக்கப்படுபவர்களின் இலக்கும் குறைக்கப்படவுள்ளது.

