தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த சில தினங்களாக நிலவி வந்த அரசியல் பதற்றம் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ் ஆகியோரை அமெரிக்காவின் ‘டெல்டா ஃபோர்ஸ்’ சிறப்பு படையினர் நேற்று அதிரடியாக கைது செய்துள்ளனர்.
மதுரோவின் திடீர் கைதினை தொடர்ந்து, வெனிசுலாவில் நிர்வாக சீர்குலைவை தவிர்க்க அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தற்போது துணை அதிபராக பதவி வகித்து வரும் டெல்சி ரோட்ரிக்ஸ் வெனிசுலாவின் இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டின் நிர்வாக தொடர்ச்சியை உறுதி செய்யவும், பாதுகாப்பை பலப்படுத்தவும் இந்த நியமனம் அவசியமானது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதே சமயம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெனிசுலா தற்காலிகமாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும், ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்கும் வரை அந்நாட்டை தாங்களே நிர்வகிக்கப்போவதாகவும் அறிவித்துள்ளார். இருப்பினும், புதிய அதிபராக நியமிக்கப்பட்டுள்ள டெல்சி ரோட்ரிக்ஸ், மதுரோவின் கைதை கடுமையாக கண்டித்துள்ளார்.

