ரொரன்ரோவின் மிட்டவுன் பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் பிறந்த குழந்தையைக் கைவிட்டதாகக் கூறப்படும் பெண் மீது தற்போது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குழந்தையின் அடையாளத்தைப் பாதுகாக்கும் நோக்கில், குற்றம் சாட்டப்பட்ட பெண்ணின் விபரங்கள் வெளியிடப்படவில்லை. குழந்தையைக் கைவிடுதல் மற்றும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அத்தியாவசியத் தேவைகளை வழங்காமை ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
கடந்த டிசம்பர் 21ஆம் திகதி, காலை 10:40 மணியளவில், யோங் வீதி மற்றும் புரோட்வே அவென்யூ பகுதிக்கு அருகில் குழந்தை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக ரொரன்ரோ பொலிஸாருக்கு அழைப்பு கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், பிறந்த குழந்தையை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். பின்னர், குழந்தையின் தாயும் கண்டுபிடிக்கப்பட்டார்.
தாய் மற்றும் சேய் இருவரும் வைத்தியசாலையில் பராமரிப்பு பெற்று வருவதாக பொலிஸ் கான்ஸ்டபிள் ஸ்டெபானி மிசெலி தெரிவித்தார். இந்த வழக்குத் தொடர்பான மேலதிக விபரங்களை வெளியிட பொலிஸார் மறுத்துவிட்டனர்.
இந்தச் சம்பவம் 44 புரோட்வே அவென்யூவில் அமைந்துள்ள புனித மோனிக்கா கத்தோலிக்க தேவாலயத்தில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து தேவாலயத்தைத் தொடர்பு கொண்டபோது, இந்த வழக்கு பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அவர்களைத் தொடர்பு கொள்ளுமாறு தேவாலயத்தின் செயலாளர் பதிலளித்தார். சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

