உலகப் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ள வேளாங்கண்ணியில், வரும் பிப்ரவரி மாதம் முதல் சுற்றுலா பயணிகளுக்காக ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்தியாவின் முக்கிய சுற்றுலா தலங்களில் உள்ளது போல, வேளாங்கண்ணி மற்றும் அதன் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுப்புற பகுதிகளை வான்வழியாக சுற்றி பார்க்கும் வசதி விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
இந்த சேவையின் கீழ், சுமார் 25 கிலோமீட்டர் சுற்றளவை வான்வழியாக கண்டு ரசிக்க ஒருவருக்கு ரூ. 6,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு பயணத்தில் ஒரே நேரத்தில் 6 பயணிகள் வரை செல்ல முடியும். இது தவிர, அவசர தேவைகளுக்காகவும், பயணிகளின் வசதிக்காகவும் வேளாங்கண்ணியில் இருந்து திருச்சி மற்றும் சென்னை விமான நிலையங்களுக்கு நேரடி ஹெலிகாப்டர் சேவையை விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த முயற்சி வேளாங்கண்ணிக்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, மாவட்டத்தின் சுற்றுலா துறையையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

