பெங்காலி நடிகர் மற்றும் பாஜக எம்.எல்.ஏ.வான ஹிரான் சாட்டர்ஜியின் இரண்டாவது திருமணம் தற்போது பெரும் சட்டச் சிக்கலாக மாறியுள்ளது.
மாடல் ரித்திகா கிரியை அவர் இரண்டாவதாக திருமணம் செய்த புகைப்படங்கள் வெளியான நிலையில், ஹிரானின் முதல் மனைவி அனிந்திதா சாட்டர்ஜி தங்களுக்கு இன்னும் விவாகரத்து ஆகவில்லை என்றும், இந்த திருமணம் சட்டவிரோதமானது என்றும் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து மௌனம் கலைத்துள்ள ரித்திகா கிரி, இன்ஸ்டாகிராமில் ஒரு நீண்ட விளக்கத்தை அளித்துள்ளார். அதில், “நாங்கள் நீண்ட காலத்திற்கு முன்பே வாரணாசி கங்கை கரையில் எளிமையாக திருமணம் செய்து கொண்டோம். கடந்த ஐந்து ஆண்டுகளாக நாங்கள் ஒன்றாக தான் வாழ்ந்து வருகிறோம். இது அனிந்திதாவிற்கும் தெரியும். விவாகரத்து நோட்டீஸ் ஏற்கனவே அவருக்கு அனுப்பப்பட்டுவிட்டது. எங்கள் திருமணம் சட்டவிரோதமானது என்று அவர் கருதினால், ஊடகங்களில் பேசுவதை நிறுத்திவிட்டு சட்டப்படி நீதிமன்றத்தை நாடட்டும்” என்று காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.
ஹிரான் அண்மையில் தன்னுடன்தான் தங்கியிருந்தார் என்ற அனிந்திதாவின் கூற்றையும் ரித்திகா மறுத்துள்ளார். இதற்கிடையில், அனிந்திதா மற்றும் அவரது மகள் நியாஷா ஆகியோர் கொல்கத்தாவில் உள்ள ஆனந்தபூர் காவல் நிலையத்தில் ஹிரான் மற்றும் ரித்திகா மீது புகார் அளித்துள்ளனர். இந்த விவகாரத்தில் ஹிரான் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

