தமிழ் சினிமாவில் மாஸ் படங்களுக்கு எப்போதும் தனி மவுசு உண்டு. அந்த வகையில், அஜித் குமார் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி பிளாக் பஸ்டர் வெற்றியைப் பெற்ற ‘மங்காத்தா’ திரைப்படம் தற்போது மீண்டும் திரையரங்குகளில் வெளியாகி தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. படம் வெளியாகி பல ஆண்டுகள் கடந்தாலும், தற்போதும் ரசிகர்களிடையே அதே உற்சாகமும், எதிர்பார்ப்பும் நிலவி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பேசிய ரசிகர்கள், “மங்காத்தா ரீ-ரிலீஸ் ஆகுற மாதிரி தெரியவில்லை. ஏதோ முதல்முறை தியேட்டருக்கு போய் பார்க்கப்போற புதுப் படம் மாதிரியான உணர்வு இருக்கிறது. நாங்க இதுவரை பார்க்காத ஒரு ஸ்டைலிஷ் மற்றும் நெகட்டிவ் ஷேட் கலந்த அஜித்தை வெங்கட் பிரபு இந்த படத்தில் காட்டியிருப்பார். தியேட்டரில் அந்த பிஜிஎம் கேட்கும்போது கிடைக்கிற வைப் வேற லெவல்!” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
தற்போது சுமார் 50-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்த படம் திரையிடப்பட்டுள்ளது. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அனைத்து திரையரங்குகளும் ‘ஹவுஸ்புல்’ காட்சிகளாக மாறி வருகின்றன. அஜித்தின் ‘சால்ட் அண்ட் பெப்பர்’ லுக் மற்றும் ‘வினாயக் மகாதேவ்’ என்ற மாஸான கதாபாத்திரத்தை மீண்டும் பெரிய திரையில் காண ரசிகர்கள் பட்டாளம் திரண்டு வருகிறது. மங்காத்தா படத்தின் மிரட்டலான ஓப்பனிங், அஜித் ரசிகர்களின் பலத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

