தஞ்சையில் நடைபெற்ற திமுக டெல்டா மண்டல மகளிர் அணி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சிகளின் கூட்டணியை கடுமையாகச் சாடினார்.
அதிமுக மற்றும் பாஜக இடையே உருவான கூட்டணி என்பது கொள்கை ரீதியானது அல்ல என்றும், அது அமித்ஷாவால் திணிக்கப்பட்ட ஒரு “பிளாக்மெயில் கூட்டணி” என்றும் அவர் விமர்சித்தார். மிரட்டல் மற்றும் உருட்டல்களால் உருவான இந்த கட்டாய கூட்டணியை மக்கள் நிராகரிப்பார்கள் என்று அவர் தெரிவித்தார்.
மத்திய அரசின் “டபுள் இன்ஜின்” அரசு முழக்கத்தை கிண்டல் செய்த முதலமைச்சர், “அந்த டப்பா இன்ஜின் ஏன் இன்னும் மணிப்பூரை காப்பாற்றவில்லை?” என்று கேள்வி எழுப்பினார். மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்முறைகளை சுட்டிக்காட்டிய அவர், இந்தியாவிலேயே பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
திராவிட மாடல் ஆட்சியின் சிறப்புகளை பட்டியலிட்ட ஸ்டாலின், “பெண்கள் கேட்காமலேயே அவர்களின் தேவைகளை உணர்ந்து நிறைவேற்றும் ஆட்சிதான் இது” என்றார். மகளிர் இலவசப் பேருந்து பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை போன்ற திட்டங்கள் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், வரவிருக்கும் 2026 தேர்தலிலும் பெண்கள் திமுகவின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

