கனடாவிற்கு தற்காலிக விசாவில் வருகை தந்தவர்கள், தங்களின் விசா காலம் முடிவடைந்ததும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற விதியை அந்நாட்டு அரசு தற்பொழுது தீவிரப்படுத்தியுள்ளது. கனேடிய குடிவரவுத் துறை அமைச்சர் லெனா மெட்லெஜ் தியாப் இது குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தற்காலிக விசாக்களில் கனடாவுக்குள் வருபவர்கள் வெளியேறுவதை துல்லியமாக கண்காணிக்க டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. தற்போதைய நடைமுறையில், ஒரு நபர் நாட்டை விட்டு வெளியேறும்போது அவரது விவரங்கள் எல்லைப் பாதுகாப்பு முகவரகத்தால் பதிவு செய்யப்படுகின்றன. இருப்பினும், விசா காலம் முடிந்தவுடன் ஒரு நபர் வெளியேறுகிறாரா என்பதைத் தானாகக் கண்டறியும் தொழில்நுட்ப வசதி இல்லை என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சாதாரண நடைமுறை மூலம் சரிபார்க்க அதிக நேரம் எடுப்பதால், டிஜிட்டல் முறையில் கண்காணிப்பை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2026-ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 1.9 மில்லியன் தற்காலிக விசாக்கள் காலாவதியாகவுள்ளதாக குடிவரவுத் துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக, விசிட்டர் விசா உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் கனடா சென்றுள்ள பல தமிழர்களுக்கு இந்த புதிய விதிகள் பெரும் நெருக்கடி நிலையை உருவாக்கியுள்ளன.

