கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில், பெண் அதிகாரி ஒருவரின் வீட்டிற்குள் ரகசிய கேமராக்களை பொருத்தி அவரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர். அந்தப் பெண் அதிகாரியின் வீட்டின் பல்பு ஹோல்டர்களில் மிகச்சிறிய கேமராக்களை பொருத்தி, அவரது தனிப்பட்ட தருணங்களை அந்த கும்பல் ரகசியமாக படம் பிடித்துள்ளது.
பின்னர், பத்திரிகையாளர்கள் போல வேடமிட்டு அந்த அதிகாரியை அணுகிய அவர்கள், வீடியோக்களை இணையதளத்தில் வெளியிடாமல் இருக்க 50 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளனர். மிரட்டல்களால் மனமுடைந்த அதிகாரி, காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.
விசாரணையில் சமீர் நிசார் அகமது ஷேக், அப்துல் ரஷீத் மகந்தர் மற்றும் முகமது பலேகுந்த்ரி ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஆறு ரகசிய கேமராக்கள், மெமரி கார்டுகள், பென் டிரைவ் மற்றும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டன.
வீட்டு உபயோக பொருட்களுக்குள் கேமராக்களை மறைத்து வைத்த இவர்களின் நூதன முறை போலீஸாரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த கும்பலுக்கு வேறு ஏதேனும் தொடர்புகள் உள்ளதா என விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.

