பிட்காயின் சந்தையில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் அதிரடி வீழ்ச்சி கிரிப்டோ முதலீட்டாளர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு வரை ஏறுமுகத்தில் இருந்த பிட்காயின் விலை, தற்போது அதன் உச்சத்தில் இருந்து சுமார் 50 சதவீதம் வரை சரிவை சந்தித்துள்ளது. குறிப்பாக, 2025 அக்டோபர் மாதம் ஒரு பிட்காயினின் விலை 1,26,000 டாலர்கள் என்ற வரலாற்று சாதனையை தொட்டது. ஆனால், தற்போது அது 63,000 டாலராக கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்த சரிவின் மூலம், 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றபோது உருவான பிட்காயின் விலை உயர்வு மற்றும் கொண்டாட்டங்கள் அனைத்தும் தற்போது முழுமையாக துடைத்தெறியப்பட்டுள்ளன.
மிக குறுகிய காலத்தில் பிட்காயின் இவ்வளவு பெரிய சரிவை சந்திப்பது இதுவே முதல்முறை என்று சந்தை வல்லுநர்கள் கவலை தெரிவிக்கின்றனர். சர்வதேச பொருளாதார மாற்றங்கள் மற்றும் கிரிப்டோ சந்தை மீதான கட்டுப்பாடுகள் இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகின்றன.
ஒரு காலத்தில் லாபத்தை கொட்டிய பிட்காயின், இப்போது முதலீட்டாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருவதால், கிரிப்டோ கரன்சி மீதான நம்பகத்தன்மை மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது.

