டொராண்டோ நகரில் தொடர்ச்சியாகப் பொதுமக்களைத் துன்புறுத்தி வந்த முகமது அஸ்கார் முகமது-ரசிக் எனும் 45 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். டொராண்டோ காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையைத் தொடர்ந்து, நான்கு வெவ்வேறு குற்றவியல் துன்புறுத்தல் வழக்குகளின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை நகரின் பல்வேறு பகுதிகளில் இச்சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஜூன் 8 அன்று டண்டாஸ் வீதி மேற்கில் ஒரு பெண்ணை அனுமதியின்றி படம்பிடித்தது, ஆகஸ்ட் 21 அன்று யூனியன் நிலையத்தில் போக்குவரத்து ஊழியரை இன ரீதியாகத் துன்புறுத்தியது எனப் பல புகார்கள் இவர் மீது உள்ளன. மேலும், செப்டம்பர் மாதம் டேவிட் பெகாட் சதுக்கத்தில் ஒருவரைத் துன்புறுத்தியதுடன், பெண் காவல்துறை அதிகாரி ஒருவரை இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பின்தொடர்ந்து அவரது தோற்றம் குறித்துக் கருத்துத் தெரிவித்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 10 அன்று கைது செய்யப்பட்ட முகமது-ரசிக், கடந்த புதன்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இந்த விசாரணையில் இன்னும் கூடுதல் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என காவல்துறையினர் கருதுகின்றனர். இது குறித்த மேலதிகத் தகவல்கள் தெரிந்தவர்கள் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
டொராண்டோவில் இலங்கை நபர் கைது – பெண்ணை அனுமதியின்றி படம்பிடித்தது போன்ற பல குற்றசாட்டுகள்!

