2026 டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இலங்கை அணி ‘சூப்பர் 8’ சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த வரலாற்று வெற்றிக்கு பிறகு பேசிய இலங்கை பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா, அணியின் முன்னேற்றத்திற்கு இந்திய பயிற்சியாளர்களான ஆர். ஸ்ரீதர் மற்றும் விக்ரம் ரத்தோர் ஆகியோரே முக்கிய காரணம் என பாராட்டியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர்களான இவர்கள், தற்போது இலங்கையின் ஃபீல்டிங் மற்றும் பேட்டிங் பயிற்சியாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.
இலங்கை வீரர் பதும் நிசாங்காவின் அதிரடி சதம் மற்றும் அவர் பிடித்த அற்புதமான கேட்ச் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. “ஸ்ரீதர் மற்றும் விக்ரம் இருவரும் வீரர்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ளனர். அவர்களின் ஐபிஎல் அனுபவம் எங்களது அணிக்கு மிகப்பெரிய பலம்” என்று ஜெயசூர்யா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
தொடக்கத்தில் ரன்களை வாரி வழங்கினாலும், மதீஷா பத்திரனா காயத்தால் வெளியேறிய நிலையிலும், சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டு ஆஸ்திரேலியாவை இலங்கை கட்டுப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. ஹசரங்கா மற்றும் பத்திரனா போன்ற முக்கிய வீரர்கள் காயமடைந்தாலும், புதிய உத்வேகத்துடன் இலங்கை அணி சூப்பர் 8 சுற்றில் நுழைகிறது.

