அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள நேரடி போர் காரணமாக மத்திய கிழக்கின் வான்வெளி போர்க்களமாக மாறியுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 410 விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 444 விமானங்கள் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு கருதி ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ உள்ளிட்ட இந்திய நிறுவனங்கள் தங்களது சேவைகளை அதிரடியாக நிறுத்தியுள்ளன.
ஈரானின் ஏவுகணை தாக்குதலால் துபாய் மற்றும் தோஹா விமான நிலையங்கள் முடங்கியுள்ளன. இதனால் ஒலிம்பிக் பதக்க வீராங்கனை பி.வி. சிந்து துபாயிலும், இந்திய கூடைப்பந்து அணியினர் கத்தாரிலும் சிக்கி கொண்டுள்ளனர்.
பி.வி. சிந்து இங்கிலாந்தில் நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்க சென்றபோது இந்த தடங்கல் ஏற்பட்டுள்ளது. இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் வளைகுடா வான்வெளியை தவிர்க்குமாறு விமானிகளுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிரியா மற்றும் ஏமன் வான்வெளிகளுக்கான தடையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் வான்வெளி முடக்கம் ஆயிரக்கணக்கான இந்தியப் பயணிகளின் பயணத்தை பாதித்துள்ளதோடு, சர்வதேச போக்குவரத்துக்கும் பெரும் சவாலாக மாறியுள்ளது.

