மார்ச் 20 முதல் JioHotstar தளத்தில் வெளியாகவுள்ள Chiraiya இணையத்தொடர், இந்திய சமூகம் நீண்டகாலமாக தவிர்த்து வரும் ‘திருமணத்திற்குள் நடக்கும் வன்புணர்வு’ என்ற சிக்கலான தலைப்பை பேசுகிறது.
ஷஷாந்த் ஷா இயக்கத்தில், திவ்யா தத்தா மற்றும் சஞ்சய் மிஸ்ரா நடிப்பில் உருவாகியுள்ள இத்தொடர், ஒரு பெண்ணின் உடல் மீதான அவளது உரிமை திருமணத்திற்கு பிறகு பறிபோகிறதா என்ற கேள்வியை முன்வைக்கிறது.
சிறிய ஊரில் வசிக்கும் ஒரு சாதாரண மருமகளாக திவ்யா தத்தா இதில் நடித்துள்ளார். காலங்காலமாக பழகிப்போன ஆணாதிக்க சூழலை எதிர்க்காமல் வாழ்ந்து வரும் அவர், ஒரு கட்டத்தில் தனது நிலையை உணத் தொடங்குகிறார்.
சம்மதம் என்பது திருமணத்திற்கு பிறகு மறைந்துவிடும் ஒன்றல்ல என்பதை இத்தொடர் ஆணித்தரமாக பதிவு செய்கிறது. சட்ட ரீதியான சிக்கல்கள் ஒருபுறம் இருந்தாலும், சமூகம் சார்ந்த விழிப்புணர்வு ஆண்களுக்கும் பெண்களுக்கும் எவ்வளவு அவசியம் என்பதை 6 பாகங்களில் இத்தொடர் விளக்குகிறது.
வெறும் கதையாக மட்டுமில்லாமல், காலம் காலமாக நிலவி வரும் மௌனத்தை கலைக்கும் ஒரு முயற்சியாக ‘சிரையா’ அமைந்துள்ளது.

