கனடாவில் ஈரானிய புரட்சிகர இராணுவத்துடன் தொடர்புடைய நபர்களைக் கண்டறிந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை மத்திய அரசு ‘மிகவும் தீவிரமாக’ முன்னெடுத்து வருவதாகப் பொதுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். அண்மையில் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல்களின் பின்னணியில், கனடாவில் வசிக்கும் ஈரானிய அதிகாரிகளால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள் குறித்த கவலைகள் அதிகரித்துள்ளன.
கடந்த மூன்று ஆண்டுகளில் ஈரானிய ஆட்சியுடன் தொடர்புடைய ஒரு நபர் மட்டுமே கனடாவிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் என்ற விமர்சனங்களுக்குப் பதிலளித்த அமைச்சர், அரசாங்கத்தின் செயல்பாடுகள் முறையான ஆய்வுகளுக்கு உட்பட்டவை என்றார். ஈரானிய புரட்சிகர இராணுவத்தைச் சேர்ந்த 239 பேரின் விசாக்கள் இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது நிராகரிக்கப்பட்டுள்ளன. மேலும் 270 நபர்கள் குறித்த தீவிர புலனாய்வு விசாரணைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், டொராண்டோவில் ஈரானிய ஆட்சிக்கு எதிராகக் குரல் கொடுத்து வரும் ஆர்வலர் ஒருவரின் உடற்பயிற்சிக் கூடத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடா ஈரானிய ஆதரவாளர்களின் புகலிடமாக மாறிவிட்டதாக எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. கனடாவின் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலை தற்போது ‘நடுத்தரம்’ என்ற அளவில் நீடிப்பதாக கனடா பாதுகாப்பு புலனாய்வு சேவை அறிவித்துள்ளது.

