ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜாம்பா, 2026 ஐபிஎல் தொடரை தவிர்த்துவிட்டு பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாடுவதற்கான காரணங்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.
கடந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் விடுவிக்கப்பட்ட அவர், இந்த ஆண்டு ஏலத்தில் பங்கேற்கவில்லை. ஐபிஎல் தொடர் நீண்ட காலம் நடப்பதாலும், தனது சுழற்பந்து வீச்சு திறமைக்கு அங்கு தகுந்த ஊதியம் கிடைக்கவில்லை என்றும் அவர் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு சுழற்பந்து வீச்சாளர்களை விட, அதிரடி பேட்டர்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஐபிஎல் ஏலத்தில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது கராச்சி கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஜாம்பா, பிஎஸ்எல் தொடரில் விளையாடும் முடிவு மிக குறுகிய காலத்தில் எடுக்கப்பட்டதாக கூறியுள்ளார். ஐபிஎல் தொடரில் இதுவரை 22 போட்டிகளில் விளையாடி 31 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஜாம்பா, போதிய வாய்ப்புகள் கிடைக்காததும் தனது முடிவுக்கு ஒரு காரணம் என விளக்கியுள்ளார்.

