மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க ஐக்கிய அரபு அமீரகம் ராணுவ ரீதியாக களமிறங்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரான் இந்த முக்கிய கடல்வழி பாதையை முடக்கியுள்ளதால், உலகளாவிய எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு சந்தையில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க ஊடகம் ஒன்றின் செய்தியின்படி , அமெரிக்கா மற்றும் பிற நட்பு நாடுகளுடன் இணைந்து ஈரானிய கண்ணிவெடிகளை அகற்றவும், கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அமீரகம் திட்டமிட்டுள்ளது. இது அந்த நாட்டின் நீண்டகால வெளியுறவு கொள்கையில் ஏற்பட்டுள்ள ஒரு முக்கியமான மாற்றமாக கருதப்படுகிறது. மேலும், ஈரான் பிடியில் உள்ள அபு மூசா உள்ளிட்ட தீவுகளை அமெரிக்கா கைப்பற்ற வேண்டும் என்றும் அமீரகம் வலியுறுத்தி வருகிறது.
இதற்கிடையில், ஈரானின் அத்துமீறல்கள் தொடர்ந்தால் சவூதி அரேபியாவும் போரில் குதிக்க நேரிடும் என எச்சரித்துள்ளது. இதற்கேற்ப, அமீரக விமான நிறுவனங்கள் ஈரானியர்கள் நுழைவதற்கு தடையும் விதித்துள்ளன. இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு, ஈரானுக்கு எதிராக பிராந்தியத்தில் புதிய கூட்டணி உருவாகி வருவதை உறுதிப்படுத்தியுள்ளார்.

