இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த்.. தற்போது விஜய்க்கு இருப்பது போல 80, 90களில் ரஜினிக்கு ரசிகர்கள் இருந்தார்கள். 1996ம் வருடம் பாட்ஷா பட விழாவில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை ரஜினி விமர்சித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.. அது ரஜினியை அரசியலுக்கும் இழுத்து வந்தது. ஆனால் அரசியலைப் பொறுத்தவரை உடனே முடிவெடுக்காமல் மிகவும் பொறுமையாக யோசித்து முடிவெடுக்கலாம் என ரஜினி தள்ளிப்போட்டார்.. அப்படியே 25 வருடங்கள் போய்விட்டது.
அந்த 25 வருடங்களும் தனது திரைப்படங்களில் அரசியல் தொடர்பான வசனங்களை ரஜினி பேசி வந்தார்.. எனவே கண்டிப்பாக அவர் அரசியலுக்கு வருவார் என அவரின் ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஒரு கட்டத்தில் நான் அரசியலுக்கு வரப்போகிறேன் எனவும் ரஜினி அறிவித்தார்.
ஆனால், உடல்நிலையை காரணம் காட்டி பின்வாங்கினார். அதன்பின் அரசியல் தொடர்பாக அவர் அதிகம் பேசுவதில்லை.. பேசக்கூடாது எனவும் முடிவெடுத்திருக்கிறார்.. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ரஜினி பேசியபோது ‘தேர்தல் வரப்போகிறது.. மக்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?’ என ஒருவர் கேட்டதற்கு சிரித்துக்கொண்டே கையெடுத்து கும்பிட்டார் ரஜினி.
மேலும் ஜெயிலர் 2 படம் பற்றி அப்டேட் கேட்டபோது ‘படம் கிட்டத்தட்ட முடிந்து விட்டது.. ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர் அறிவிப்பார்.. கமலுடன் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் துவங்கும்’ ரஜினி கூறினார்.

