கனடாவில் அரிதான ஆனால் உயிருக்கு மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய Invasive Meningococcal Disease பாக்டீரியா தொற்று பாதிப்பு, கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. கனடா பொதுச் சுகாதார முகமை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்தத் தொற்றின் பரவல் கடந்த சில ஆண்டுகளில் மிகத் தீவிரமடைந்துள்ளது.
கடந்த 2021-ஆம் ஆண்டில் 48 ஆகக் காணப்பட்ட பாதிப்புகளின் எண்ணிக்கை, 2023-ல் 100 ஆக உயர்ந்தது. தற்போது கிடைத்துள்ள சமீபத்திய தரவுகளின்படி, 2024-ல் 132 ஆகவும், 2025-ல் 155 ஆகவும் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது 2012-ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவான மிக உயர்ந்த பாதிப்பு அளவாகும். குறிப்பாக ஒன்டாரியோ, கியூபெக் மற்றும் மேனிடோபா ஆகிய மாகாணங்களில் அதிகப்படியான பாதிப்புகளும் உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.
இந்தத் தொற்று மூளை மற்றும் தண்டுவடத்தைச் சுற்றியுள்ள சவ்வுகளில் வீக்கம், இரத்த ஓட்டத்தில் நச்சுத் தொற்று மற்றும் உடல் உறுப்பு செயலிழப்பு போன்ற உயிருக்கு ஆபத்தான நிலைகளை உருவாக்குகிறது. புள்ளிவிவரங்களின்படி, இந்தத் தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 14 சதவீதம் பேர் உயிரிழக்கின்றனர். மேலும், இதிலிருந்து மீண்டு வருபவர்களில் 15 முதல் 20 சதவீதம் பேருக்குக் காது கேளாமை, நரம்பியல் குறைபாடுகள் அல்லது உடல் உறுப்புகளை நீக்க வேண்டிய கட்டாயம் போன்ற வாழ்நாள் முழுவதுமான பாதிப்புகள் ஏற்படுகின்றன.
கடுமையான தலைவலி, காய்ச்சல், கழுத்து விறைப்பு, வெளிச்சத்தைப் பார்க்க இயலாமை, வாந்தி, குழப்பமான மனநிலை மற்றும் உடல் முழுவதும் திடீரெனத் தோன்றும் தடிப்புகள் ஆகியவை இந்த நோயின் முக்கிய அறிகுறிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் பொதுமக்கள் உடனடியாக மருத்துவச் சிகிச்சையை நாட வேண்டும் எனச் சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

