காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு பிரிட்டிஷ் குடியுரிமை இருப்பதாக கூறப்படும் விவகாரத்தில், அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விரிவான விசாரணை நடத்த லக்னோ உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விக்னேஷ் சிஷிர் என்பவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த தனி நீதிபதி அடங்கிய அமர்வு இந்த முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
முன்னதாக, ராகுல் காந்தி மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை லக்னோவில் உள்ள சிறப்பு நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் தள்ளுபடி செய்தது.
இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த விசாரணையின் போது, ராகுல் காந்திக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள புகார்கள் மற்றும் ஆதாரங்கள் விரிவாக ஆராயப்பட வேண்டியவை என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. மேலும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து விசாரணை நடத்துமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது.
மனுதாரர் விக்னேஷ் சிஷிர் வாதிடுகையில், ராகுல் காந்தி ஒரு பிரிட்டிஷ் குடிமகன் என்பதற்கான ஆதாரங்கள் மற்றும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மின்னஞ்சல்கள் தன்னிடம் இருப்பதாக தெரிவித்தார். வெளிநாட்டு குடியுரிமை வைத்திருப்பவர் இந்தியாவில் தேர்தலில் போட்டியிடவோ, மக்களவை உறுப்பினராகவோ இருக்க முடியாது என்பதால் அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த உத்தரவு காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

