ஐபிஎல் 2026 சீசன் மே 31-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், இந்திய அணி ஜூன் 6 முதல் 10 வரை ஆப்கானிஸ்தானுக்கு எதிராக முல்லன்பூரில் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. ஐபிஎல் இறுதி போட்டி முடிந்து வெறும் 6 நாட்களே இடைவெளி இருப்பதால், முன்னணி வீரர்களின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு பிசிசிஐ சில அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது.
குறிப்பாக, நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் கேப்டன் சுப்மன் கில் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இந்த டெஸ்ட் போட்டி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளின் கீழ் வராததால், முக்கிய வீரர்களுக்கு பதிலாக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு வாய்ப்பளிக்க தேர்வுக்குழு திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபி இந்திய அணியில் அறிமுகமாக அதிக வாய்ப்புள்ளது. ரஞ்சி கோப்பையில் 60 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய இவரை, டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஐபிஎல் ஏலத்தில் 8.4 கோடி ரூபாய்க்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.
அவருடன் குர்னூர் பிரார், மானவ் சுதார் மற்றும் ஹர்ஷ் துபே போன்ற இளம் வீரர்களும் அறிமுகமாக வாய்ப்புள்ளது. இலங்கையுடனான டெஸ்ட் தொடர் மற்றும் இங்கிலாந்து வெள்ளைப்பந்து தொடரை முன்னிட்டே இந்த மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

