இலங்கை, இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் ‘ஏ’ அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் முத்தரப்பு தொடருக்கான இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஜூன் 9ஆம் தேதி தொடங்கி ஜூன் 21ஆம் தேதி வரை இலங்கையில் நடைபெறவுள்ள இத்தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை நட்சத்திர வீரர் திலக் வர்மா கேப்டனாக வழிநடத்த உள்ளார். இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த அணியில் ரியான் பராக் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ப்ரியான்ஷ் ஆர்யா, வைபவ் சூர்யவன்ஷி, ஆயுஷ் படோனி மற்றும் நிஷாந்த் சிந்து போன்ற திறமையான பேட்டர்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர். விக்கெட் கீப்பர்களாக பிரப்சிம்ரன் சிங் மற்றும் குமார் குஷாக்ரா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பந்துவீச்சுத் துறையை வலுப்படுத்த ஹர்ஷ் துபே, விப்ராஜ் நிகாம், யாஷ் தாக்கூர், யுத்வீர் சிங், அன்ஷுல் கம்போஜ் மற்றும் அர்ஷத் கான் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் சூரியன்ஷ் ஷெட்கே மிடில் ஆர்டரில் பலம் சேர்க்க உள்ளார்.
இலங்கையில் நடைபெறும் இந்தத் தொடர் இளம் இந்திய வீரர்களுக்குத் தங்களது திறமையை சர்வதேச அளவில் நிரூபிக்க ஒரு பொன்னான வாய்ப்பாக அமையும்.
பிசிசிஐ தரப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அணிப் பட்டியல் கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திலக் வர்மாவின் தலைமையில் இளம் படை சாதிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

