மிசிசாகா மற்றும் பிராம்ப்டன் பகுதிகளில் அதிகரித்து வரும் சில்லறைத் திருட்டுகளைக் கட்டுப்படுத்த பீல் பிராந்திய காவல்துறை ‘Project Filcher’ என்ற பெயரில் விரிவான புலனாய்வை மேற்கொண்டது. 2026 பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை நடத்தப்பட்ட இந்த சோதனையின் முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 65 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது 556 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக நைக், வால்மார்ட் , LCBO மற்றும் Shoppers Drug Mart போன்ற பெரிய வணிக நிறுவனங்கள் மீண்டும் மீண்டும் இலக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒரு குறிப்பிட்ட நைக் கிளையில் மட்டும் 2025 ஆம் ஆண்டின் இறுதி ஆறு மாதங்களில் 266 திருட்டுகள் நடந்துள்ளன. இந்த குற்றச் செயல்களால் வணிக நிறுவனங்களுக்கு சுமார் 2,50,000 டாலர்களுக்கும் அதிகமான நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த துணைத் தலைமை அதிகாரி மார்க் ஆண்ட்ரூஸ், இது ஒரு சாதாரண சில்லறைத் திருட்டு அல்ல என்றும், திருடப்பட்ட பொருட்கள் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் மறுவிற்பனை செய்யப்படுவதாகவும் கூறினார். கைது செய்யப்பட்டவர்களில் 39 பேருக்கு நிரந்தர முகவரி இல்லை என்பதும், இவர்கள் திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல்களுடன் தொடர்புடையவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நடவடிக்கை உள்ளூர் வணிகங்களையும் சமூகத்தையும் பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

