டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறை அமெரிக்காவின் ஜனாதிபதியாக மாறிய பின் பல அதிரடியான அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். பல மாற்றங்களையும் செய்து வருகிறார். குறிப்பாக அமெரிக்காவின் பல கொள்கைகளை அவர் மாற்றியமைத்து
வருகிறார். ஏற்கனவே இந்தியா, சீனா உள்ளிட்ட பல நாடுகளின் மீதும் இறக்குமதி வரியை பல மடங்கு உயர்த்தினார். அதன்பின் அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதை கண்டித்ததால் அதிலிருந்து பின் வாங்கினார்..
ஒருபக்கம் ஈரான் அணு ஆயுதம் வைத்துக்கொள்ளக்கூடாது என சொல்லி அந்நாட்டின் மீது போரை துவங்கினார். இதன் காரணமாக கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது. தற்போது அந்த போர் முடிவுக்கு வந்திருக்கிறது.
இந்நிலையில்தான் அமெரிக்காவின் முக்கிய இராணுவ பிரிவான இந்தோ – பசிபிக் கமாண்ட்(USINDOPACOM) என்ற பெயரை பசிபிக் கமாண்ட் (USPACOM) என மாற்றுவதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்திருக்கிறார்..
சீனாவை எதிர்கொள்ளவும், இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் முக்கியத்துவத்தை உணர்த்தவும் கடந்த 8 ஆண்டுகளாக இந்தோ பசிபிக் என்ற வார்த்தையை அமெரிக்கா பயன்படுத்தி வந்த நிலையில்தான் தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

